
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் - மோகித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர்.இதில் ஹரிஹரன் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அஜிதேஷ் குருஸ்வாமியும் 5 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய நிதீஷ் ராஜகோபாலும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டைழந்தார். அதன்பின் களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் அதிரடியாக விளையாடிய அருண் கார்த்திக் தேவைப்படு நேரங்களில் பவுண்டரி விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த கேப்டன் அருண் கார்த்திக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் அவருக்கு துணையாக விளையாடி வந்த ரித்திக் ஈஸ்வரன் 29 ரன்களில் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய சோனு யாதவ் அதிரடியாக விளையாடும் முயற்சியில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 17 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் தொடர்ந்து அபாரமாக விளையாடிய அருண் கார்த்திக் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 84 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து ஹரிஷ் 3 ரன்களிளுக்கும், சிலம்பரசன் 4 ரன்களுக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யபிரகாஷ் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.