டிஎன்பிஎல் 2025: சாத்விக், ரஹேஜா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது திருப்பூர்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 221 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

TNPL 2025 Final: தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் அரைசதம் கடந்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களின் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் மிரட்டினர்.
அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அமித் சாத்விக் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 65 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோரும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். பின்னர் இணைந்த ரஹாஜே மற்றும் முகமது அலி இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்த கையோடு ரஹேஜா தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் முகமது அலியும், 20 ரன்னில் சசிதேவும் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனோவங்கர் 25 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களைச் சேர்த்துள்ளது. திண்டுக்கல் அணி தரப்பில் கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now