
திருநெல்வேலி: திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் வ்ருண் சக்ரவர்த்தி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் கவின் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் அபிஷேக்கும் 15 ரன்களில் நடைடைக் காட்டினார். பின்னர் இணைந்த நிதீஷ் ராஜகோபால் மற்றும் சன்னி சந்து ஆகியோர் அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
இதில் சன்னி சந்து 25 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய ராஜேந்திரன் விவேக்கும் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் முறுமுனையில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராஜகோபால் அரைசதம் கடந்ததுடன் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 74 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.