
திருநெல்வேலி: லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் அமித் சாத்விக் மற்றும் எசக்கிமுத்து ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஜிதேந்திர குமார் 6 ரன்னிலும், லோகேஷ்வர் 21 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சச்சினும் 24 ரன்களை மட்டுமே சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து வந்த ராகவேந்திரன் 11, ஷாருக் கான் 19, விஷா வைத்யா 13 என வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
அதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரே சித்தார்த் ஒருபக்கம் நிதானமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் விளையாடிய திவாகர், சித்தார்த், வித்யூத் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே சித்தார்த் 21 ரன்களை எடுத்தார். இதன் கரணமாக லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்திருந்து. திருப்பூர் அணி தரப்பில் எசக்கிமுத்து 3 விக்கெட்டுகளையும், நடராஜன் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.