
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்து இந்த தொடரில் தொடர்ச்சியக நான்காவது தோல்வியைத் தழுவியுள்ளது.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் மற்றும் சுஜய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் வசீம் 32 ரன்களிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கௌஷிக் 5 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான சுஜயும் 25 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய சஞ்சய் யாதவ் 27 ரன்களிலும், ஜாஃப்ர் ஜமால் 6 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ராஜ் குமார் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. கோவை கிங்ஸ் தரப்பில் சுப்ரமணியம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.