
திருநெல்வேலி: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜ்குமாரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் லீக் போட்டி இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பாலச்சந்தர் அனிருத் 7 ரன்னிலும், அஜய் சேட்டன் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சதுர்வேத் 4 ரன்னிலும், ராம் அரவிந்த் 14 ரன்னிலும், முருகன் அஸ்வின் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, அந்த அணி 29 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த ஆதீக் உர் ர்ஹ்மான் மற்றும் சரத் குமார் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஆதிக் உர் ரஹ்மான் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சரத் குமார் 37 ரன்கலையும், குர்ஜப்நீத் சிங் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழப்பிற்கு 131 ரன்களைச் சேர்த்தது. திருச்சி தரப்பில் ஈஸ்வரன், அதிசயராஜ், சரவண குமார் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.