பிபிஎல் 13: விதிகளை மீறிய டாம் கரண்; நான்கு போட்டிகளில் விளையாட தடை!
ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் பிக் பேஷ் லீக் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டாம் கரண் விதிகளை மீறியதாக 4 போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து இளம் வீரர் டாம் கரனை ஆர்சிபி அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியது. இதுவரை ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாம் கரணை, ஆர்சிபி அணி என்ன காரணத்திற்காக வாங்கியது என்று யாருக்கும் புரியவில்லை.
ஏனென்றால் கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள டாம் கரண், இதுவரை சொல்லி கொள்ளும்படி பெரிதாக விளையாடியதில்லை. இதனால் ஆர்சிபி நிர்வாகம் தவறு செய்ததா அல்லது வேறு வீரர் கிடைக்காமல் வேறு வழியின்றி இவரை வாங்கியதா என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
Trending
இந்த நிலையில் ஆர்சிபி அணி வாங்கிய நேரம் டாம் கரண் புதிய சர்ச்சையில் உள்ளார். ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் பிக் பேஷ் லீக் தொடரில் டாம் கரண் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். இதில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அதன்படி நடப்பு பிக் பேஷ் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் அனைவரும் போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் டாம் கரண் பவுலிங் பயிற்சி செய்வதற்கான ரன் அப்பை பிட்ச்-க்கு அருகில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது பவுலர் பிட்சை கண்காணித்து கொண்டிருந்த 4ஆவது நடுவர், டாம் கரணை தடுத்து நிறுத்தி, பிட்சில் ஓட வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன்பின் மறுமுனையில் இருந்து டாம் கரண் பவுலிங் செய்வதற்கான ரன் அப்பை மேற்கொண்டார். அப்போது க்ரீஸிற்கு அருகில் இருந்த நடுவரை நோக்கி டாம் கரண் வந்துள்ளார்.
இதனால் டாம் கரணுடன் மோதுவதை தவிர்க்கும் வகையில் உடனடியாக நடுவர் அந்த இடத்தை விட்டு விலகி சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடுவரை விலகி செல்லுமாறு டாம் கரண் கூறும் காட்சி காணொளி மூலமாக தெரிய வந்தது. இது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய விதிகளின் படி லெவல் 3 விதிமீறலாகும்.
இதையடுத்து டாம் கரண் 4 பிக் பேஷ் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 26 முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை சிட்னி சிக்சர்ஸ் விளையாடும் 4 போட்டிகளில் டாம் கரண் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து டாம் கரண் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now