இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி - டாம் லேதம்!
டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் பாராட்டியுள்ளார்.
இந்தியாவில் இன்று கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் மட்டுமே குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்களையும், ஜாஸ் பட்லர் 43 ரன்களையும் குவித்து அசத்தினர்.
Trending
பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் தொடக்க வீரர் டெவான் கான்வே 152 ரன்களையும், மூன்றாவது வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 123 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம், “இது ஒரு அற்புதமான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. அதிலும் குறிப்பாக டெவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரது சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களுக்கு வெற்றி தந்துள்ளனர். ஆரம்பத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. குறிப்பாக இங்கிலாந்து போன்ற வலுவான அணியை 280 ரன்களில் சுருட்டியது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிக்காட்டுகிறது.
ஏற்கனவே இந்த மைதானத்தில் நாங்கள் கடந்த ஆண்டு விளையாடியுள்ளோம். இன்றைய போட்டியில் விளையாடிய எங்கள் அணியின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். மேலும் முக்கியமான கட்டங்களில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணியை 280 ரன்களில் சுருட்ட முடிந்தது. இறுதியில் பிரமாதமான ஆட்டத்தின் மூலம் நாங்கள் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now