
நியூசிலாந்து அணியானது சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணி இரண்டு போட்டியிலும் இலங்கை அணியிடம் படுதோல்வியைத் தழுவியதுடன், ஒயிட்வாஷ் ஆனது.
இந்த தோல்வியின் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 37,50 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது எதிவரும் அக்டோபர் 16ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான படுதோல்வியின் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதீ விலகுவதாக அறிவித்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக டாம் லேதம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 17 பேர் அடங்கிய டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.