
இந்தியாவில் கோலாலமாக நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. இத்தனைக்கும் அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்து ஆஸ்திரேலியாவை 49.3 ஓவரில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மார்னஸ் லபுஷாக்னே 71, கேமரூன் கிரீன் 47 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனால் 287 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு மீண்டும் ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் 13, கேப்டன் ஜோஸ் பட்லர் 1, லியாம் லிவிங்ஸ்டன் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் பென் ஸ்டோக்ஸ் 64, மொயின் அலி 42, கிறிஸ் ஓக்ஸ் 32 ரன்கள் எடுத்தும் 48.1 ஓவரில் இங்கிலாந்தை 253 ரன்களுக்கு சுருட்டி வென்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா 5ஆவது வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் 6ஆவது தோல்வியை பதிவு செய்த இங்கிலாந்து லீக் சுற்றுடன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.