
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வீரர்களை கொண்டு நடத்தப்படும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் தோயம் ஹைதராபாத் மற்றும் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு ஹாமில்டன் மஸகட்ஸா - மார்ட்டின் கப்தில் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்களை எடுத்திருந்த நிலையில் மார்ட்டின் கப்தில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 16 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் மஸகட்ஸாவும் தனது விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கேதர் ஜாதவ் 15 ரன்களில் நடையைக் கட்ட, பின்னர் இணைந்த கோஸ்வாமி மற்றும் சிராக் காந்தி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிராக் காந்தி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிக்கும்புராவும் முதல் பந்தில் சிக்ஸரை விளாசிய நிலையில் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.