
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நேற்று சௌத்தாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர்.
இதில் தொடக்கத்தில் தடுமாறிய டிராவிஸ் ஹெட், அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி 19 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின்னர் 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 59 ரன்களைச் சேர்த்த நிலையில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மேத்யூ ஷார்ட் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ ஷார்ட் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 41 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவருக்கு துணையாக விளையாடி வந்த ஜோஷ் இங்கிலிஸ் 37 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 10 ரன்களிலும், டிம் டேவிட் ரன்கள் ஏதுமின்றியும், கேமரூன் க்ரீன் 13 ரன்களுக்கும், சீன் அபோட் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஸேவியர் பார்ட்லெட் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.