ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 9ஆவது சீசன் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து இத்தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கான போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இன்று டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சூர்யகுமார் யாதவை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் 4 இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அதேசமயம் சூர்யகுமார் யாதவ். பில் சால்ட், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் தலா ஒரு இடம் பின் தங்கி அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். அதேசயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸின் ஜான்சன் சார்லஸ் 4 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தையும், ஆஃப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லா குர்பாஸ் 5 இடங்கள் முன்னேறி 11ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.