
ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இந்த தோல்வி மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
அதன்படி இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிரென்ட் போல்ட் 2.1 ஓவர்களை மட்டுமே வீசிய நிலையில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் டிரென்ட் போல்ட் தனது 300ஆவது விக்கெட்டுகளையும் பூர்த்தி செய்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் படைத்துள்ளார்.