
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் சிறப்பு மைல் கல் ஒன்றை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டை கைப்பற்றும் பட்சத்தில் அவர் டி20 கிரிக்கெட்டில் தனது 300 விக்கெட்டுகளை நிறைவு செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் இந்த மைல் கல்லை எட்டும் 3ஆவது நியூசிலாந்து வீரர் எனும் பெருமையை பெறுவார்.