
நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டிருந்த நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் லீக் போட்டியின்போது ஃபீல்டிங் செய்துகொண்டிருக்கையில் வலது காலில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
உடனடியாக நாடு திரும்பிய அவருக்கு ஏப்ரல் மாதம் முதல் வாரம் காலில் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த அறுவை சிகிச்சையினால் உலகக்கோப்பை தொடரில் இடம்பெற முடியாமல் போய்விடுமோ? என்கிற அச்சமும் ஏற்பட்டது. ஏனெனில் கடந்த 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கு கேன் வில்லியம்சனின் பங்களிப்பு இன்றியமையாதது ஆகும். அப்படிப்பட்ட வீரர் இல்லை என்பது மிகப்பெரிய பின்னடைவை தரும் என்பதால் இந்த அச்சம் நிலவியது.
அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளது. தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் கென் வில்லியம்சன், அவ்வப்போது மெதுவாக உடற்பயிற்சி செய்து வருகிறார். மெல்ல மெல்ல காயத்திலிருந்து குணமடைய வேண்டும். உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்று தனது சமீபத்திய பேட்டியில் விருப்பம் தெரிவித்துள்ளார்.