ஐபிஎல் 2022: லக்னோ அணியின் தோல்வி குறித்த் மெண்ட்டர் கம்பீரின் பதிவு!
வலுவான அணியாக கருதப்பட்ட லக்னோ அணி, எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்களில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தநிலையில், அந்த அணியின் மென்ட்டரான கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
15ஆவது சீசன் ஐபிஎல் போட்டியின் லீக் போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல் குவாலிஃபயர் மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் முதல் குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்று, அறிமுக அணியான குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. இதையடுத்து மழைக்கு நடுவே நேற்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதின.
எலிமினேட்டர் போட்டி என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையில், டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை தேர்வு செய்ததை அடுத்து, பெங்களூரு அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ஆனால் அந்த அணியின் அனுபவ வீரர்களான கேப்டன் டூ பிளசிஸ் டக் அவுட்டாக, முன்னாள் கேப்டன் விராத் கோலி 25 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தநிலையில், கிளென் மேக்ஸ்வெல் 9 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஆனால் அந்த அணியின் இளம் வீரரான ரஜத் படிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் அடிக்க, அவருக்கு பக்க பலமாக தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து, இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Trending
இதனைத் தொடர்ந்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் கே.எல்.ராகுல் (79) மற்றும் தீபக் ஹூடா (45) ஆகியோர் மட்டுமே நிதானமாக விளையாடினர். எனினும் அந்த அணி 14 ரன்களில் தோல்வியடைந்து குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதிபெறாமல் எலிமினேட்டாகி வெளியேறியது. இந்தப் போட்டியில் கே.எல். ராகுலின் இரண்டு தவறுகளால் தான் அணி தோல்வியை நோக்கி சென்றதாக விமர்சனம் எழுந்தது. முக்கியமானப் போட்டியில் அதிரடியாக விளையாடாமல், கே.எல். ராகுல் பொறுமையாக விளையாடி 58 பந்துகளில் 79 ரன்களே எடுத்தது விமர்சனம் எழுந்தது.
இதேபோல் லக்னோ அணியின் பீல்டிங்கின்போது, முக்கியமான கட்டத்தில் 14.4-வது ஓவரில் மொசின் கான் வீசிய பந்தை, பெங்களூரு அணி தினேஷ் கார்த்திக் கவர் திசையில் அடிக்க, பந்து,லக்னோ கேப்டன் கே.எல் ராகுல் கையை நோக்கி சென்றது. இந்த கேட்சை அவர் பிடித்துவிடுவார் என நினைத்த பெவிலியனில் இருந்த அந்த அணியின் மெண்டார் கவுதம் கம்பீர் கைதட்டினார். ஆனால் ராகுல் கேட்சை கோட்டை விட கம்பீர் முகமும் மாறியது. இதையடுத்து முகத்தை கோபமாக கைகளை வைத்து கம்பீர் மூடி கொண்டார்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட தினேஷ் கார்த்திக் 1 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 37 ரன்களை விளாசி அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்து அந்த அணி வெற்றிபெற திருப்புமுனையாக இருந்தார். இதனால் கே.எல். ராகுல் மீது விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில், லக்னோ அணியின் மெண்ட்டர் கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இன்று கடினமான அதிர்ஷ்டம் நிறைந்த நாள்தான். எனினும், எங்கள் புதிய அணிக்கு ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. நாங்கள் வலுவாக திரும்பி வருவோம். மீண்டும் சந்திக்கும் வரை!" இவ்வாறு அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now