
இந்திய கிரிக்கெட் அணிக்கு மகேந்திர சிங் தோனியின் காலத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய பிரச்சனை இருந்து வருகிறது. அது என்னவென்றால் அணியின் பேட்டிங் வரிசையில் மேலிருந்து பேட்ஸ்மேன் யாரும் பந்து வீசக்கூடிய அளவில் இல்லை என்பதுதான். கங்குலி காலத்தை எடுத்துக் கொண்டால் கங்குலி, சச்சின், சேவாக், யுவராஜ் சிங் என்று ஒரு பெரிய பகுதி நேர பந்துவீச்சு படையே இருந்தது.
இவர்கள் தனிப்பட்ட முறையில் பந்துவீச்சில் அணிக்கு வெற்றியும் தேடித் தந்திருக்கிறார்கள். இதற்கு அடுத்து மகேந்திர சிங் தோனியின் காலத்திற்கு வரும் பொழுது சச்சின், சேவாக், யுவராஜ் சிங், ரெய்னா என்று மீண்டும் இந்த வரிசை அப்படியே தொடர்ந்தது. இதில் விராட் கோலி கூட சில நேரங்களில் மிதவேக பந்துவீச்சை செய்திருக்கிறார்.
ஆனால் விராட் கோலி கேப்டன் பொறுப்புக்கு வந்த பிறகு பகுதிநேர பந்துவீச்சுக்கு ஆளே கிடையாது என்கின்ற நிலை ஏற்பட்டது. அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஏதாவது ஒரு இடத்தில் அடி வாங்கும் பொழுது, அவர்களைக் காப்பாற்றி தடுத்து வைக்கவும், எதிரணியை ஆச்சரியப்படுத்தி விக்கெட் எடுக்கவும், மேலும் ஒரு பேட்ஸ்மேனை அணிக்குள் கூடுதலாக கொண்டு வரவும் பகுதிநேர பந்துவீச்சாளர்கள் அணிக்குத் தேவைப்படுகிறார்கள்.