
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அண்டர் 19 அணியை எதிர்த்து பாகிஸ்தான் அண்டர் 19 அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஷாஜாய்ப் கான் 4 ரன்களுக்கும், ஷாமில் ஹுசைன் 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அஸான் அவாய்ஸ் ஒருபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சாத் பைக் 03, அஹ்மத் ஹசன் 04, ஹாரூன் அர்ஷத் 08 ரன்களுக்கு என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அஸான் - அராஃபத் மின்ஹாஸ் இணை தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்தனர். பின் அஸான் 52 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 52 ரன்கள் எடுத்த நிலையில் அராஃபதும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இவர்களைத்தொடர்ந்து வந்த உபைத் ஷாவும் 6 ரன்களில் நடையைக் கட்டினார்.