
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த தொடக்கமானது கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் துல்நித் சிகெரா 2 ரன்னிலும், புலிந்து பெரேரா 6 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமத் தின்சராவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை யு19 அணியானது 8 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் ஜோடி சேர்ந்த சாருஜன் சண்முகநாதன் மற்றும் லக்வின் அபேசிங்க இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுதியதுடன், அணிக்கு தேவையான ரன்களையும் சேர்த்தனர். இதில் சிறப்பாக விளையாடிய அபேசிங்க தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 90 ரன்களைக் கடந்தது. பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சண்முகநாதன் 42 ரன்னில் ஆட்டமிழந்தார்.