
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா மற்றும் ஜப்பான் அண்டர்19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின். ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜப்பான் அண்டர்19 அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அண்டர்19 அணிக்கு ஆயுஷ் மத்ரே - வைபவ் சூர்யவன்ஷி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் அதிரடியாக தொடங்கிய நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து மத்ரேவுடன் இணைந்த அண்ட்ரே சித்தார்த்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் ஆயுஷ் மத்ரே தனது அரைசதத்தையும் பதிவுசெய்தார். அதன்பின் 54 ரன்னில் ஆயுஷ் மத்ரே விக்கெட்டை இழக்க, அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே சித்தார்த் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இணைந்த கேப்டன் முகமது அமான் மற்றும் கார்த்திகேயா இணையும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் இணைந்து 4அவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தியதுடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர். பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களில் கார்த்திகேயா விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த நிகில் குமார் 12 ரன்னிலும், ஹர்வன்ஷ் சிங் ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.