
அண்டர்19 வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் யு19 மற்றும் ஐக்கிய அரபு அமீரக யு19 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு உஸ்மான் கான் மற்றும் ஷாசீப் கான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் உஸ்மான் கான் 41 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதைத்தொடர்ந்து ஷாசீப் கானுடன் இணைந்த முகமது ரியாஸுல்லாவும் அதிரடியாக விளையாட பாகிஸ்தான் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷாசீப் கான் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். முன்னதாக இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் ஷாசீப் கான் சதம்விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷாசீப் கான் 11 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 136 ரன்களைக் குவித்து தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் ரியாஸுல்லாவும் தனது சதத்தைப் பதிவுசெய்தார்.