ஐசிசி யு19 உலகக்கோப்பை அணியில் நான்கு இந்திய வீரர்களுக்கு இடம்!
நடைபெற்று முடிந்த ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் முஷீர் கான், உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே ஆகியோருக்கு ஐசிசி அணியில் இடம் கிடைத்துள்ளது.
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரின் அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து நேற்று முந்தினம் இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டியில் பெனோனியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அண்டர்19 அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்களைச் சேர்த்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஜாஸ் சிங் 55 ரன்களை விளாசினார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராஜ் லிம்பானி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அண்டர்19 அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
Trending
இதில் தொடக்க வீரர் அதார்ஷ் சிங் 47, முருகன் அபிஷேக் 42 ரன்களைச் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன், 4ஆவது முறையாக ஐசிசி யு19 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைத் தேர்வுசெய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கிய ஐசிசி அண்டர்19 உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி தப்பில் இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட முஷீர் கான், கேப்டன் உதய் சஹாரன், சச்சின் தாஸ், சௌமி பாண்டே ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியின் கேப்டனாக உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஹக் வெய்ப்ஜென் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி யு19 உலகக்கோப்பை அணி: லுவாண்ட்ரே பிரிட்டோரியஸ் (தென் ஆப்பிரிக்கா), ஹாரி டிக்சன் (ஆஸ்திரேலியா), முஷீர் கான் (இந்தியா), ஹக் வெய்ப்ஜென் (ஆஸ்திரேலியா, கேப்டன்), உதய் சஹாரன் (இந்தியா), சச்சின் தாஸ் (இந்தியா), நாதன் எட்வர்ட் (வெஸ்ட் இண்டீஸ்), காலம் விட்லர் (ஆஸ்திரேலியா) , உபைத் ஷா (பாகிஸ்தான்), குவேனா மபகா (தென் ஆப்பிரிக்கா), சௌமி பாண்டே (இந்தியா), ஜேமி டங்க் (12ஆவது வீரர், ஸ்காட்லாந்து).
Win Big, Make Your Cricket Tales Now