
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய யுஏஇ அணிக்கு கேப்டன் முகமது வாசீம் - ஆர்யன் லக்ரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது வாசீம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய அரவிந்த் 2, பசில் ஹமீத் 5, தனிஷ் சுரி 11, அலி நாசர் 6, ஆர்யன் கான் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபக்கம் அரைசதம் கடந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆர்யன் லக்ரா 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 63 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் யுஏஇ அணி 7 விக்கெட்டுகளை இழந்து166 ரன்களைச் சேர்த்தது.