
ஐபிஎல் எனும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008ஆம் தொடங்கி, தற்போது உலகின் முன்னணி டி20 தொடர்களில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை 14 சீசன்களைக் கடந்த இத்தொடர் நேற்றுடன் தனது 15ஆவது சீசனையும் வெற்றிகரமாக கடந்தது.
இந்தியாவின் மூலை முடிக்கில் இருக்கும் இளம் வீரர்களுக்கு தேவையான வாய்ப்பை அளித்து அவர்களை பட்டை தீட்டி உலகத்தரம் வாய்ந்த வீரராக ஜொலிக்க வைக்கும் நோக்கத்திலேயே இந்த தொடர் துவங்கப்பட்டது. அந்த வகையில் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் திலக் வர்மா, முகேஷ் சவுத்ரி போன்ற நிறைய தரமான இளம் வீரர்களும் அடையாளம் காணப்பட்டார்கள்.
அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் உச்சகட்ட அடையாளமாக ஜொலித்தார் என்றே கூறலாம். தற்போது 22 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் கடந்த 2021 இல் முதல் முறையாக ஒருசில போட்டிகளில் விளையாடினாலும் 140 கி.மீ வேகப்பந்துகளை அசால்டாக வீசி அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி போன்றவர்களின் பாராட்டுகளை அள்ளினார்.