
இந்தியா இதுவரை கண்ட வேகப்பந்து வீச்சாளர்களில் அதிவேகமான பந்துவீச்சாளர் ஜம்மு காஷ்மீர் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் உம்ரான் மாலிக் தான். இந்திய கிரிக்கெட்டில் சச்சின் அறிமுகமான காலகட்டத்தில் உணர்ந்த பரவசத்தை, அதற்குப் பிறகு உம்ரான் மாலிக் அறிமுகத்தின் போது தான் நான் உணர்ந்தேன் என்று சுனில் கவாஸ்கர் சொல்லும் அளவுக்கு, அவர் மீதான எதிர்பார்ப்பு இருந்தது.
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தனது காஷ்மீர் அணியின் சக வீரர் அப்துல் சமாத் மூலம் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வந்து, தமிழகத்தின் நடராஜன் கொரோனா காலத்தில் காயமடைய, அந்த வாய்ப்பில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்து, தனது அதிவேகப்பந்து வீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணிக்கு நுழைந்தவர் உம்ரான் மாலிக்.
ஆனால் அவரிடம் வேகம் இருக்கும் அளவுக்கு விவேகம் தென்படவில்லை. அவரிடம் சுயமான பந்துவீச்சு சிந்தனை குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக அவரது வேகத்தை பயன்படுத்தி பந்துவீச்சாளர்கள் வெகு எளிதாக பவுண்டரிகள் விளாசுகிறார்கள். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் அவர் வெறும் ஐந்து விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். மேலும் அவருடைய எக்கானமி 10.80.