
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மிகவும் தடுமாறி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் மைதானத்தில் இந்த இலக்கு என்பது சாதாரணமாக எட்டக் கூடியதுதான்.
இந்த நிலையில் இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் டெல்லியை விட மோசமாக விளையாடியது. இறுதியில் கிளாசன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாட கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அந்தக் கடைசி ஓவரை வீசிய முகேஷ் குமார் களத்தில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜான்சன் இருவரையும் வைத்துக்கொண்டு, மிகப் பிரமாதமாக வீசி வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே கொடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணிக்கு வெற்றியைக் கொண்டு வந்தார்.