
இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் நான்கு நாள் போட்டியானது கேன்டர்பரியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் அபிமன்யூஸ் ஈஸ்வரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபிமன்யூ ஈஸ்வரன் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் சர்ஃப்ராஸ் கான் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கருண் நாயர் சதமடித்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 180 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சர்ஃப்ராஸ் கான் 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் கருண் நாயருடன் ஜோடி சேர்ந்த துருவ் ஜூரெலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் துருவ் ஜூரெல் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.