
அமெரிக்க அணியானது வரும் ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நெதர்லாந்தில் நடைபெறும் ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை லீக் 2 ஒருநாள் தொடரில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகளுடன் விளையாடவுள்ளது. அதனைத்தொடர்ந்து நெதர்லாந்தில் நடைபெறவுள்ள நெதர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடரிலும் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர்களுக்கான அமெரிக்க அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக மொனாங்க் படேலும், துணைக்கேப்டானாக ஆரோன் ஜோன்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான கோரி ஆண்டர்சன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் மிலிந்த் குமார் டி20 தொடரில் இருந்தும், நிஸ்ரக் படேல் இரு அணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு குழைந்த பிறப்பின் காரணமாக அமெரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சௌரப் நேத்ரவால்கரும் இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக சமித் படேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் இத்தொடர்களுக்கான அமெரிக்க அணியிலும் உன்முக் சந்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.