
சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையச்சுற்று ஆட்டத்தில் ஆந்திரா மற்றும் உத்தர பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற உத்தர பிரதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆந்திர அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆந்திர அணிக்கு ஸ்ரீகர் பரத் - அஸ்வின் ஹெப்பர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸ்ரீகர் பரத் 4 ரன்னிலும், அஸ்வின் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஷைக் ரஷீத் 18 ரன்களுக்கும், அவினேஷ் 19 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ரிக்கி புய் - பிரசாத் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ரிக்கி புய் 23 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும், மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரசாத் 34 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய சசிகாந்த் 23 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் ஆந்திரா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. உத்தர பிரதேச அணி தரப்பில் கேப்டன் புவ்னேஷ்வர் குமார், விப்ராஜ் நிகாம் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.