
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்துவிதத்திலும் சிறப்பான பங்களிப்பு செய்து, 3 விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துவைத்திருந்தவர் ஹர்திக் பாண்டியா.
2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் முதுகில் அடைந்த காயத்திற்கு பிறகே அவரது ஃபிட்னெஸ் சரியாக இல்லை. அதன்பின்னர் அடிக்கடி காயங்களால் அவதிப்பட்டுவருகிறார் ஹர்திக் பாண்டியா. 2019 உலக கோப்பையில் ஆடிய ஹர்திக் பாண்டியா, அந்த தொடரிலும் ஒரு பேட்ஸ்மேனாகத்தான் ஆடினாரே தவிர, பவுலிங் வீசவில்லை. பவுலிங் வீசுமளவிற்கான ஃபிட்னெஸுடன் அவர் இல்லாததால் தான் பந்துவீசவில்லை. கடந்த ஐபிஎல் சீசனிலும் அவர் பந்துவீசவில்லை.
ஹர்திக் பாண்டியா பந்துவீசினால் தான் அவர் இந்திய அணியில் இருப்பது பிரயோஜனம். ஏனெனில் அவர் ஒரு ஆல்ரவுண்டராகத்தான் இந்திய அணிக்கு தேவை. டி20 உலக கோப்பைக்கு பிறகு, முழு ஃபிட்னெஸை அடைவதற்காக அவராகவே காலவரையற்ற ஓய்வு எடுத்துக்கொண்டார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.