
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள அருணாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து அருணாச்சல பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அருணாச்சல பிரதேச அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் கெடக் ஈடே, லிச்சா ஜான், பிகி குமார், டெச்சி நெரி உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரர் ராஜேந்திர சிங் 30 ரன்களை எடுத்த கையோடு பெவிலியன் திரும்பினார். இதனால் அந்த அணி 45 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஹர்திக் வர்மா மற்றும் அபினவ் சிங் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபினவ் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஹர்திக் வர்மா 38 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபினவ் சிங் 71 ரன்களைச் சேர்த்தார். இதனால் அருணாச்சல பிரதேச அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கர்நாடகா அணி தரப்பில் கௌசிக் மற்றும் ஹர்திக் ராஜ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.