
இந்தியாவின் உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று காலிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. இதில் தமிழ்நாடு அணி காலிறுதி போட்டியில் சௌராஷ்டிரா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சௌராஷ்டிரா அணியின் சீனியர் வீரர் ஷெல்டான் ஜாக்சன் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 62 ரன்களுக்கு ஹர்விக் ஆட்டமிழந்தார். ஜெய் ஜோஹில் 34 ரன்களையும் மற்றும் சமர்த் வியாஸ் 27 ரன்களையும் ஆகிய இருவரும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர்.
அதன்பின்னர் ஆர்பிள் வசவடா 51 ரன்களையும் மற்றும் சிராக் ஜானி 52 ரன்களையும் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, 50 ஓவரில் சௌராஷ்டிரா அணி 293 ரன்களை குவித்தது. தமிழ்நாடு அணி தரப்பில் முகமது, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.