விஜய் ஹசாரே கோப்பை 2023: வருண், சாய் கிஷோர் சுழலில் வீழ்ந்தது நாகாலாந்து; காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
நாகாலாந்து அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்தியாவில் உள்ளூரு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசரே கோப்பை நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஈ பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு மற்றும் நாகாலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளது.
அதன்படி களமிறங்கிய நாகாலாந்து அணி ஆரம்பம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் ஜோஷுவா 13, ஷாம்வாங் வாங்னாவ் 1, ஓரேன் நகுல்லி 1, சுமித் குமார் 20, கேப்டன் ஜோனதன் 5 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.
Trending
இதனால் 19.4 ஓவர்களில் வெறும் 69 ரன்கள் மட்டுமே எடுத்து நாகாலாந்து அணி ஆல் அவுட்டாகியது. தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதில் நாகாலாந்து அணியைச் சேர்ந்த 8 வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களைக் கூட கடக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய தமிழ்நாடு அணிக்கு வழக்கத்திற்கு மாறாக சாய் கிஷோர் - நாராயண் ஜெகதீசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் கிஷோர் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களையும், ஜெகதீசன் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்தனர்.
இதன்மூலம் தமிழ்நாடு அணி வெறும் 7.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் நாகாலாந்து அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி 6 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியளில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now