விஜய் ஹசாரே கோப்பை 2023: நடராஜன் அபார பந்துவீச்சு; பரோடாவை வீழ்த்தியது தமிழ்நாடு!
பரோடா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் போட்டியில் தமிழ்நாடு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஒன்று விஜய் ஹசரே கோப்பை ஒருநாள் தொடர். இத்தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிருப்பாக நடபெற்றுவருகிறது. இதில் இதில் குரூப் இ பிரிவில் இன்று தமிழக அணியும் பரோடா அணியும் மும்பையில் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் பரோடா வீரர்கள் சிறப்பாக பந்து வீசி தமிழக அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். குறிப்பாக லுக்மான் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிழக அணியில் சாய் சுதர்சன் 15 ரன்களும், சாய் கிஷோர் 8 ரன்களும், நாராயன் ஜெகதீசன், பாபா அபாரஜித் டக் அவுட் ஆகியும், பாபா இந்திரஜித் ஐந்து ரன்களிலும் விஜய் சங்கர் 11 ரன்களிலும் என ஆட்டமிழந்ததால், தமிழக 52 ரன்கள் சேர்ப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Trending
அப்போது நடு வரிசையில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். அவருக்கு துணியாக ஷாருக்கான் 31 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன் மூலம் தமிழக அணி 33.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பரோடா அணிக்கு ஜோத்ஸ்னில் சிங் - நினத் ரத்வா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜோத்ஸ்னில் ரன்கள் ஏதுமின்றியும், நினத் 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷஸ்வத் ராவத் 18 ரன்களிலும், அபிமன்யூ சிங் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இப்போட்டியில் தமிழக வீரர் நடராஜன் தன்னுடைய ஆக்ரோஷமான பந்து வீச்சால் பரோடா வீரர்களை நிலை குலைய வைத்தார்.நடராஜன் பந்தை எதிர்கொள்ள முடியாமல் பரோடா வீரர்கள் தடுமாறினர். அதன்பின் கேப்டன் விஷ்ணு சோளங்கி மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்த பரோடா அணி 124 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் ஏழு ஓவர்களில் 38 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். டி20 உலககோப்பை இன்னும் 6 மாதத்தில் வர உள்ள நிலையில், நடராஜன் சிறப்பாக பந்துவீசி வருவது, அவர் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறிது.
Win Big, Make Your Cricket Tales Now