
ஐசிசி என்றழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், டி20 வீரர், டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி, டி20 அணி மற்றும் டெஸ்ட் அணி ஆகியவற்றைத் தேர்வுசெய்து விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் என்ற ஐசிசி விருது இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் விராட் கோலி 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,795 ரன்கள் குவித்துள்ளார். இதில், 12 அரைசதங்களும், 5 சதங்களையும் விளாசியுள்ளார்.
மேலும், நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய அவர் 765 குவித்து உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசி, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையையும் முறியடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.