
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக மோதிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 24.1 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா, 56 சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருந்தனர்.
இந்த நிலையில் போட்டியின் போது மழை குறுக்கிட்டு நிற்காமல் பெய்த காரணத்தினால், போட்டிக்கு ரிசர்வ் டே இருந்ததால், இன்றைக்கு ஆட்டம் தொடர்ந்தது. விராட் கோலி கேஎல் ராகுலும் இந்திய அணியின் இன்னிங்சை தொடர்ந்து ஆரம்பித்தனர். இந்த இன்னிங்ஸில் ஒரு புறத்தில் கேஎல் ராகுல் மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டுக்கு திரும்பியது போல் இல்லாமல், மிகச்சிறப்பான ஆட்டத்தை அதிரடியாகவும் அதே நேரத்தில் தகுந்த ஆட்கள் மூலமாகவும் விளையாடினார்.
இன்னொரு முனையில் விளையாடிய விராட் கோலி பெரிய ஆபத்தான ஷாட்கள் எதற்கும் செல்லவில்லை. ஆனாலும் வழக்கம்போல் அவரது பேட்டில் இருந்து ரன்கள் வந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து விளையாடிய இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு அரை சதத்தை கடந்தனர். மேற்கொண்டு மழை இருப்பதின் அபாயத்தை உணர்ந்து, தேவைக்கு அதிகமான ரன்களை திரட்டுவதில் ஆர்வம் காட்டினர்.