
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்திய அணி தனது நான்காவது போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 184 ரன்கள் அடித்தது. இப்போட்டியிலும் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார். 44 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என நினைத்திருந்தபோது, அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக வந்தவர் வங்கதேச அணியின் துவக்க வீரர் லிட்டன் தாஸ். பவர்-பிளே ஓவரில் இந்திய பவுலர்கள் வீசும் பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சர்களாக அடித்து திணறடித்தார்.
ஆறு ஓவர்களில் 60 ரன்களை எட்டியது வங்கதேச அணி. அப்போது லிட்டன் தாஸ் 21 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார். நடுவில் மழை குறுகிட்டதால், ஆட்டத்தின் போக்கு முற்றிலுமாக இந்திய அணியின் பக்கம் மாறியது.