ஸ்லோ ஓவர் ரேட் : இந்திய அணிக்கு அபராதம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்து கொண்டதாக இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 விழுக்காடு தொகையை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 188 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Trending
இப்போட்டியின் போது பந்துவீசிய இந்திய அணி வீரர்கள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்து பந்துவீசியதாக கள நடுவர்கள் முறையிட்டனர். இதனை விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்திய அணி மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்து வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 40 விழுக்காடு தொகையை அபராதமாக விதித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐசிசி நடத்தை விதிகள் 2.22-ன் படி சர்வதேச போட்டிகளின் போது பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது குற்றம். ஐசிசி குறிப்பிட்டுள்ள நேரத்தைக் காட்டிலும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அந்த வகையில் இந்திய அணியின் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 40 விழுக்காடு அபராதம் விதிக்கபடுகிறது. மேலும் இக்குற்றச்சாட்டை இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்டுள்ளதால், விசாரணைக்கு ஆஜராகத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now