
இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் 2017ஆம் ஆண்டிலிருந்து முதன்மை சுழற்பந்து வீச்சாளராக விளையாடி வந்தவர் யுஸ்வேந்திர சாஹல். விராட் கோலி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனானதும், ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அதனால் குல்தீப்பும் சாஹலும் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடித்து விளையாடி வந்தனர். ஆனால் 2019 உலக கோப்பையில் அவர்களது பந்துவீச்சு பெரியளவில் எடுபடாததையடுத்து, அதன்பின்னர் இருவரும் ஒருசேர இந்திய அணியில் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகிய ஸ்பின்னர்கள் ஐபிஎல்லில் தொடர்ந்து அசத்தலாக பந்துவீசியதுடன், இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளையும் அருமையாக பயன்படுத்தி கொண்டனர். அதேவேளையில், சாஹலும் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.