
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 2022 தொடர் வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசியாவின் டாப் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் இந்த தொடருக்கான முழு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா இந்தியாவை வழிநடத்தும் அந்த அணியில் காயத்திலிருந்து குணமடைந்துள்ள கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர்களுடன் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அசத்திய சூரியகுமர் யாதவ், புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்களும் தீபக் ஹூடா, ரவி பிஷ்னோய், அரஷ்தீப் சிங் போன்ற இளம் வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இருப்பினும் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் விலகியது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்ட சஞ்சு சாம்சன், இஷான் கிசான் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
அவை அனைத்தையும் விட இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 2019-க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்து வரும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் அவர் இத்தொடரில் ஃபார்முக்கு திரும்பி கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.