
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை லீக் ஆட்டம் நாளை பல்லக்கலேவில் நடக்கவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் நாளைய ஆட்டத்திற்காக காத்திருக்கின்றனர். ஏற்கனவே பாகிஸ்தான் அணி நேபாளத்தை வீழ்த்தி அபாரமான ஃபார்மில் உள்ளது.
பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என்று இந்திய அணிக்கு நிகரான பலத்துடன் பாகிஸ்தான் அணி உள்ளது. இன்னொரு பக்கம் இந்திய அணி நீண்ட நாட்களுக்கு பின் குழுவாக இணைந்திருக்கிறது. இதனால் எந்த வீரர் என்ன ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதே தெளிவாக தெரியாமல் உள்ளது. இருப்பினும் பயிற்சி முகாமில் இருந்து வந்திருப்பதால், இந்திய அணியின் ஆட்டம் மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இணைந்து ஒரே நேரத்தில் பல்லக்கலேவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முல்தானில் இருந்து இலங்கை வந்த பாகிஸ்தான் வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாலை நேரத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.