
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29ஆம் தேதி வரை 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் இந்தியாவிலேயே நடைபெறும் இந்தத் தொடர் முழுவதும் மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டும் விளையாடப்பட உள்ளது.
இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளும் சேர்ந்துள்ளதால் பெரிய அளவில் விரிவடைந்துள்ள ஐபிஎல் தொடர் 74 போட்டிகள் கொண்ட தொடராக ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மும்பை நகரில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இதுநாள் வரை ஒருமுறைகூட கோப்பைய வெல்லாத டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல தயாராகி வருகின்றன. அந்த வகையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அனுபவ நட்சத்திர வீரர் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையில் இந்த முறை எப்படியாவது முதல்முறையாக கோப்பையை முத்தமிட்டடே தீரவேண்டும் என்ற லட்சியத்துடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்க உள்ளது.