ஆசிய கோப்பையில் விராட் கோலி விளையாடுவது சந்தேகம் தான் - டேனிஷ் கனேரியா!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் விராட் கோலி இடம்பெறாத நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி புறக்கணிக்கப்படலாம் என்று டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோலி ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, கடைசியாக 2019 நவம்பரில் சதமடித்தார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
ஐபிஎல்லில் சரியாக ஆடாத விராட் கோலி மீது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 2 தொடர்களிலும் சொதப்பினார்.
Trending
ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, ஒருநாள் உலக கோப்பை என தொடர்ச்சியாக ஐசிசி சர்வதேச தொடர்கள் இருக்கும் நிலையில், கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது. ஃபார்மில் இல்லாத விராட் கோலியை நீக்கிவிட்டு, ஃபார்மில் உள்ள திறமையான இளம் வீரர்களுக்கு, அணியின் நலன் கருதி வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் சரியாக ஆடாத விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டது. அடுத்ததாக ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான ஒருநாள் அணியிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வரவேண்டும் என்றால் நிறைய கிரிக்கெட் ஆடவேண்டும். ஆனால் ஃபார்மில் இல்லாத அவரை அணியில் எடுத்து ஆடவைக்காமல், அவருக்கு ஓய்வு மேல் ஓய்வு கொடுக்கப்படுகிறது.
எனவே அவர் ஆசிய கோப்பைக்கான அணியிலும் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, “ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இருக்கும்போது இஷான் கிஷனையும் எடுத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இஷான் கிஷனுக்கு பதிலாக விராட் கோலியைத்தான் எடுத்திருக்க வேண்டும். விராட் கோலி கண்டிப்பாக ஜிம்பாப்வே தொடரில் ஆடியிருக்க வேண்டும். நேரடியாக ஐசிசி தொடர்களில் கோலியை ஆடவைக்க நினைக்கிறதா பிசிசிஐ? ஆனால் பெரிய தொடர்களில் அவர் சொதப்பினால் மீண்டும் அவர்மீது விமர்சனங்கள் எழும். அது அவருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே அமையும்.
விராட் கோலியை எப்படி கையாள்கிறீர்கள் என்பது முக்கியம். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முழுவதும் ஓய்வு அளிக்கப்பட்டதால் ஜிம்பாப்வே தொடரில் கோலி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கோலி ஃபார்முக்கு திரும்ப, ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கும். ஆனால் கோலி புறக்கணிக்கப்படுவதை பார்க்கையில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம்பெறமாட்டார் என்றே தெரிகிறது” என்று கருத்து கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now