
உலகின் தலைசிறந்த அம்பயர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் சைமன் டஃபுல். களத்தில் எடுக்கும் தனது துல்லியமான முடிவுகளால் இவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உண்டு.
ஆண்டின் சிறந்த நடுவருக்கான விருதை தொடர்ச்சியாக 5 முறை வாங்கிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சைமன் டஃபுல், கடந்த 2012ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு தற்போது அம்பயரிங் கோச்சிங் கிளாஸ்ஸை நடத்திவரும் சைமன் டஃபுல் திறமையான புதிய அம்பயர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் இந்திய வீரர்களில் யாரெல்லாம் எதிர்காலத்தில் அம்பயர் ஆகலாம் எனத் தனது விருப்பத்தை சைமன் டஃபுல் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரும் தொடக்கவீரருமான வீரேந்தர் சேவாக் அம்பயரிங்குக்கு சிறந்த தேர்வாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார் சைமன் டஃபுல். சேவாக்கிடம் இதுகுறித்து முன்பு ஒருமுறை அவர் கூற, அதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டாராம் சேவாக்.