
டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். எனினும் சமீபகாலமாக அவர் சரியாக விளையாடாததால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அவருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது என முன்னாள் வீரர் ஆம்ப்ரோஸ் கூறினார்.
ஆம்ப்ரோஸின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பேட்டியில் கெயில் கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் அணிக்குள் நான் நுழைந்தபோது ஆம்ப்ரோஸ் மீது அதிக மரியாதை வைத்திருந்தேன். என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஆம்ப்ரோஸ். கவனத்துக்காகச் செய்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் அவருக்குக் கவனம் கிடைக்கிறது.
அதனால் அவர் ஆசைப்படும் கவனத்தை நானும் திருப்பித் தருகிறேன். ஆம்ப்ரோஸ் மீது எனக்கு எவ்வித மரியாதையும் கிடையாது. எப்போது நான் அவரைப் பார்த்தாலும் அணியைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதை நிறுத்தவும், அணிக்கு ஆதரவு கொடுங்கள் எனக் கூறுவேன். முன்னாள் வீரர்களின் எந்தக் கருத்துகளையும் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.