ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் மேத்யூஸ்!
இலங்கை டி20 அணிக்கு வநிந்து ஹசரங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 3 வருடங்கள் கழித்து டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜனவரி 11ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் 14ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காயம் காரணமாக ஆசிய கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியில் இடம்பெறாமல் இருந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் வநிந்து ஹசரங்கா இத்தொடருக்கான டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் கடந்த 3 ஆண்டுகளாக டி20 அணியில் இடம்பிடிக்காமல் இருந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை அணி: வநிந்து ஹசரங்க (கேப்டன்), சரித் அசலங்கா, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷனகா, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், பதும் நிஷங்கா, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந் சமிரா, தில்ஷன் மதுசங்கா, மதீஷா பதிரனா, நுவன் துஷார, அகில தனஞ்சய.
Win Big, Make Your Cricket Tales Now