
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக பாதி தொடரின்போது சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் அடுத்த சில போட்டிகளில் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த தொடர் முழுவதுமே 8 போட்டிகளில் விளையாடிய அவர் 190 ரன்களை மட்டுமே குவித்தார். அதிலும் அதிரடிக்கு பெயர் போன வார்னர் 110-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது உண்மையிலேயே வருத்தமாகத்தான் இருந்தது.
8 போட்டிகளில் அவர் சரியாக விளையாடாததால் அவருக்கு மீதமுள்ள போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றே தெரிகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 8 அணிகள் விளையாடிய நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் சேர்க்கப்பட்டு 10 அணிகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது.