வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவின் மறைவு தனிப்பட்ட முறையில் இழப்பு என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஷேன் வார்னே தாய்லாந்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. அவரது மறைவுக்கு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா - இலங்கை டெஸ்ட் ஆட்டத்தின்போது ராகுல் டிராவிட் தனது இரங்கலைத் தெரிவித்தார். அதன் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
Trending
இதுகுறித்து பேசிய டிராவிட்,"ஷேன் வார்னேவுக்கு எதிராக விளையாடிய பெருமையும், கௌரவமும் எனக்கு உள்ளது. அவரைத் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொண்டதும், அவருடன் இணைந்து விளையாடியதும் சக வீரராக இருந்ததும் கூடுதல் பெருமைக்குரியது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக இது இருக்கும்.
அவரை அடிக்கடி பார்க்காவிட்டாலும்கூட, இது தனிப்பட்ட முறையில் ஒரு இழப்பு. உண்மையில் இது வேதனையளிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் வரை ஷேன் வார்னேவும், ரோட்னி மார்ஷும் நினைவிலிருப்பார்கள்." என்று தெரிவித்தார்.
1992-இல் அறிமுகமான ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவுக்காக 145 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 194 ஆட்டங்களில் விளையாடி 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now