
இந்திய - நியூசிலாந்து அணிகள் மோதிய 2ஆவது டி20 போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கடைசி ஓவரில் 4 விக்கெட்கள் இழப்புக்கு த்ரில் வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 99 ரன்களை மட்டுமே அடித்தது. மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கினாலும் 19.5 ஓவர்களில் தான் இந்திய அணி வெற்றி கண்டது.
முதல் போட்டியில் ஓரளவிற்கு அதிரடியாக இருந்த சூழலில் 2ஆவது போட்டியில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிக கடினமான பிட்ச்சாக இருந்தது. அதிக ஸ்பின் இருந்ததால் பேட்ஸ்மேனால் பந்தை கணிக்கவே முடியவில்லை. குறிப்பாக 2ஆவது இன்னிங்ஸில் படு மோசமாக இருந்தது. சுப்மன் கில் 11, இஷான் கிஷான் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் இந்திய அணி 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, தடுமாறிய போது தான் துணைக்கேப்டன் சூர்யகுமார் - கேப்டன் ஹர்திக் பாண்டியா ஜோடி காப்பாற்றினர். எப்போதுமே அதிரடியாக ஆடும் சூர்யகுமார் யாதவ் மிகவும் நிதானமாக விளையாடினார். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என வந்த போதும், அவர் நிதானமாக 5வது பந்தில் தூக்கி அடித்து வெற்றி பெற வைத்தார்.